search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் விபத்து"

    அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். 30 பேர் படுகாயமடைந்தனர்.
    அன்னவாசல்:

    மணப்பாறையில் இருந்து அன்னவாசல் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம், தாவூதுமில் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 48) ஓட்டினார். கண்டக்டராக புதுக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் இருந்தார். அந்த பஸ், அன்னவாசல்-புதுக்கோட்டை சாலையில் பெருஞ்சுனை என்ற இடத்தில் சென்ற போது, எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது பெருஞ்சுனையில் இருந்து அன்னவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கருப்பையா மகன் மதியழகன் (24), லாரியை முந்திச் செல்ல முயன்றார். இதைக்கண்ட பஸ் டிரைவர், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பிய போது சாலையின் ஓரத்தில் பஸ் கவிழ்ந்தது. இருப்பினும் பஸ் மீது, மோட்டார் சைக்கிள் மோதியதில், மதியழகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர். பின்னர் அவர்களை இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்களில் ஏற்றி, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி செய்தனர். பின்னர் மதியழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ்- வேன் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மயிலம்:

    சிவகங்கை மாவட்டம் எஸ்.காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் அங்குசாமி (வயது 50). இவர் தனது குடும்பத்தினருடன் சிவகங்கையில் இருந்து தனக்கு சொந்தமான வேனில் சென்னை நோக்கி புறப்பட்டார். அந்த வேனை அங்குசாமி ஓட்டினார்.

    இந்த வேனில் அங்குசாமியின் மனைவி லட்சுமி (48), அவரது உறவினர் சிவகங்கை அருகே உள்ள கட்டான்குளத்தை சேர்ந்த உமாபதி (35), உமாபதியின் மனைவி விஜி (28) மற்றும் பலர் இருந்தனர்.

    இவர்கள் வந்த வேன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

    அதேபோல் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று திருச்சி நோக்கி சென்றது. அந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் வக்கிரபட்டியை சேர்ந்த அருணானந்தன் என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவராக குப்பத்துபட்டியை சேர்ந்த பிரபு (37) என்பவரும் இருந்தார்.

    அந்த பஸ் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது விலங்கம்பாடி என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ் டிரைவர் எதிர்பாராதவிதமாக மறுபுறம் உள்ள சாலைக்கு பஸ்சை திருப்பினார்.

    சிறிது தூரம் பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் மாற்றுச்சாலையில் செல்வதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் பஸ்சை அங்கேயே நிறுத்தினார்.

    அப்போது அந்த சாலையில் அங்குசாமி குடும்பத்தினர் வேன் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் வேனில் பயணம் செய்த அங்குசாமி, அவரது மனைவி லட்சுமி, உறவினர் உமாபதி, உமாபதியின் மனைவி விஜி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் வேனில் பயணம் செய்த விக்னேஷ்வரன் (31), ரேகா (28), 1½ வயது குழந்தை நித்திஷ், பவித்ரன் (4), அரசு பஸ்சில் பயணம் செய்த டிரைவர்கள் அருணானந்தன், பிரபு, சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த குமரவேல், கரூரை சேர்ந்த நவீன் (25) உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 24 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி பலியானார்.
    இரணியல்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் கட்டயன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மனைவி அமுதா (50). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    முருகன் நேற்று மனைவி அமுதாவுடன் மோட்டார் சைக்கிளில் தக்கலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை இருவரும் வீடு திரும்பினார்கள். வில்லுக்குறி அருகே காரவிளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முருகன் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து இரணியல் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் பேபி தங்கம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசு பஸ் டிரைவர் கொட்டாரத்தை சேர்ந்த தங்கப்பன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். கணவன் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமுதா பலியானது பற்றி தகவல் அறிந்ததும் மகன், மகள்கள் கதறி அழுத்தனர்.

    பலியான அமுதாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.   
    மண்ணச்சநல்லூர் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் 4 பேர் காயம் அடைந்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சியில் இருந்து நாமக் கல்லுக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதில் 32 பயணிகள் இருந்தனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ரெட்டை மண்டபம் பகுதியில் செல்லும் போது, சாலை யோரத்தில் பஸ் இறங்கிய போது திடீரென நிலைதடுமாறி அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பயணிகள் பலத்த காயமடைந்தனர். மற்ற பயணிகள் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று உடனடியாக ஊருக்கு புறப்பட்டு சென்றனர். 

    மழை தண்ணீர் சாலையோரத்தில் தேங்கி சேறும் சகதியுமாக கிடந்ததால் பஸ் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. கவிழ்ந்த பஸ் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை அருகே இன்று காலை அரசு பஸ் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார். 90 பயணிகள் படுகாயம் அடைந்தனர். #busaccident

    ஆலங்குளம்:

    நெல்லையில் இருந்து இன்று காலை தென்காசிக்கு ஒன் டூ ஒன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ் நிலையத்தில் தென்காசிக்கு காத்திருந்ததால் ஏராளமான பயணிகள் இந்த பஸ்சில் ஏறினர். 

    வழக்கத்தை விட ஒரு மடங்கு அதிகமான பயணிகள் பஸ்சில் ஏறினர். மொத்தம் 90 பயணிகள் பஸ்சில் இருந்தனர். பஸ்சை டிரைவர் விசாக கணேசன் ஓட்டினார். கபாலி கண்டக்டராக இருந்தார். பஸ் சாலையில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் சென்றது. பஸ்சில் இருந்த பயணிகள் ஒருவித அச்சத்துடனே பயணித்தனர். 

    சிலர் டிரைவர், கண்டக்டரிடம் மெதுவாக செல்லுமாறு கூச்சலிட்டனர். எனினும் பஸ்சின் வேகம் குறைய வில்லை. பஸ் ஆலங்குளம் ஊரின் கீழ்புறம் சிவலார் குளம் விலக்கு அருகே சென்றபோது முன்னால் ஒரு பள்ளி பஸ் சென்றது. அதை அரசு பஸ் முந்த முயன்றது. இந்த வேளையில் முன்னால் சென்ற பள்ளி பஸ் பிரேக் போட்டதால் அரசு பஸ்சை டிரைவர் ஓரமாக திருப்பினார். இதனால் பஸ் ரோட்டோரம் கவிழ்ந்தது. 

    இதில் பஸ் இருந்த 30 பயணிகளுக்கு பலத்த காயமும், 60 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 90 பயணிகளும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்தார்கள். பஸ்சில் பயணம் செய்த கடையநல்லூர் அருகேயுள்ள சிவராம்பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் (83) சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் இருந்த அவரது மனைவி கோமதியம்மாளுக்கும் காயம் ஏற்பட்டது. #busaccident

    நாகர்கோவில் அருகே அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வங்கி பெண் ஊழியர் பலியானார். வங்கி ஊழியர் உடல் பஸ்சின் சக்கரத்தில் சிக்கியிருந்ததால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் வெள்ளாளர் நகரை சேர்ந்தவர் குமாரவேல். இவரது மனைவி குமாரி. இந்த தம்பதியின் மகள் இந்து (வயது 22).

    எம்.காம். பட்டதாரியான இந்து, நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலைபார்த்த வங்கியில் இருந்து ஓய்வூதியம், உதவித்தொகை பெறுபவர்கள் வசிக்கும் வீரநாராயணமங்கலம், தாழக்குடி உள்பட சில பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பணத்தை வழங்கி வந்தார்.

    இந்த பயனாளிகளின் கைரேகைகளை பதிவு செய்ய வங்கி நடவடிக்கை எடுத்தது. இதைதொடர்ந்து அவர்களின் கைரேகைகளையும் இந்து பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    வீரநாராயணமங்கலம் அருகே கண்டமேட்டு காலனி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு உள்ளவர்களும் வங்கியில் இருந்து உதவித்தொகை பெற்று வருகிறார்கள். இவர்களிடம் கைரேகை பதிவு செய்வதற்காக இன்று காலை இந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.

    திருப்பதிசாரம், வீரநாராயணமங்கலம் வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஆரல்வாய் மொழியில் இருந்து தாழக்குடி, வீரநாராயண மங்கலம் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் கிரிதர் என்பவர் ஓட்டி வந்தார். அந்த சாலையில் உள்ள வளைவில் வந்த போது எதிரில் பஸ் வருவதை பார்த்ததும் இந்து தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி பஸ்சுக்கு வழிவிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் இந்து மீது மோதியது.

    மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த தென்னந்தோப்பில் புகுந்தது. அங்கு உள்ள மரத்தில் மோதி அந்த பஸ் சரிந்த நிலையில் நின்றது. இதில் பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய இந்து இழுத்துச் செல்லப்பட்டு சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் இருந்த பயணிகளும் பயத்தில் கூச்சலிட்டனர். விபத்து நடந்ததும் பஸ்சின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    காலை நேரத்தில் நடந்த இந்த விபத்தை பார்த்ததும் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு திரண்டு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்துவின் உடல் பஸ்சின் சக்கரத்தில் சிக்கியிருந்ததால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.


    கடலூர் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூரை அடுத்த உள்ளேரிபட்டு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி இலக்கியா (28). இவர்களுக்கு கார்த்திக் (3), நகுல்(1) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக்கும், நகுலுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் அவர்களை கருணாகரனும், அவரது மனைவியும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் தனது மகன்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லிக்குப்பம் நோக்கி புறப்பட்டனர். கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

    சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த கருணாகரன் அந்த பள்ளத்தில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் அடித்து நிறுத்தினார்.

    இதில் தாய் இலக்கியா மடியில் வைத்திருந்த குழந்தை நகுல் எதிர்பாராமல் சாலையில் தவறி கீழே விழுந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் நகுல் தலையில் எதிர்பாராமல் ஏறியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதனைப் பார்த்த தாய்-தந்தை இருவரும் தங்கள் கண் முன்னே பலியான குழந்தையை கையில் எடுத்து கொண்டு கதறி அழுதனர். இதைபார்த்த அங்கு திரண்டு இருந்த பொதுமக்களும் கண் கலங்கினார்கள்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    கடலூர் அடுத்த கோண்டூர் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இதை அறிவிக்க எந்தவித பேரிகார்டோ அல்லது எச்சரிக்கை பலகையோ அங்கு அதிகாரிகள் வைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பது சரியாக தெரிவதில்லை. அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இன்று குழந்தை நகுல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அரசு பஸ்களால் 6,132 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 6,729 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று பஸ் போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. அதில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

    கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை விபத்தில் சிக்கிய அரசு பஸ்களால் 6,132 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 6,729 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த சாலை விபத்துக்களில் 8 சதவீதமாகும்.

    2013-14-ம் ஆண்டில் 1,318 பேரும், 2014-15-ம் ஆண்டில் 1,331 பேரும், 2015-16-ம் ஆண்டில் 1,460 பேரும், 2016-17-ம் ஆண்டில் 1,373 பேரும், 2017-18-ம் ஆண்டில் 1,085 பேரும் பலியாகியுள்ளனர்.

    எனவே, விபத்துக்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பஸ் ஓட்டும் போது டிரைவர்கள் செல்போனில் பேசுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மூச்சு பரிசோதனை நடத்தி வருகின்றனர். நீண்டநேரம் இயக்கப்படும் பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. விபத்து நடைபெறும் அபாய பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துதல், சாலை வசதி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்த தகவலை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்தார். கடுமையான நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016-2017-ம் ஆண்டில் அரசு பஸ் விபத்துக்களால் 1,373 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் 2017-2018-ம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,086 ஆக குறைந்துள்ளது.

    விபத்தில் பலியானோருக்கு ரூ.80 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிக தொகை. இவை முழுவதையும் அரசால் வழங்க இயலாது. எனவே பயணிகளிடம் இருந்து ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது.

    அதாவது பயணிகளிடம் இருந்து டிக்கெட்டில் ரூ.1 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் விபத்து காப்பீடு வழங்கப்படும். கடந்த ஜனவரி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு தொகை பெற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். #TNAssembly #TNMinister #MRVijayabaskar
    நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. கிருஷ்ணகிரியை சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 37) பஸ்சை ஓட்டிச் சென்றார்.

    வாணியம்பாடி தாண்டி நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தறிகெட்டு ஓடியது.

    சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பியை உடைத்து 25 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் தூக்க கலக்கத்தில் இருந்தனர். அவர்கள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததை பார்த்து அலறி கூச்சலிட்டனர். 27 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த நாட்டறம்பள்ளி போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பஸ்சின் ஈடுபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×